தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விமானம் மூலம் வருகை
இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்வதற்காக உள் துறை அமைச்சர் அமித் ஷா நாளை (மார்ச் 7) நாகர்கோவிலுக்கு வருகிறார்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அமித் ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு காலை 9.30 மணிக்கு வருகிறார்.
தாணுமாலயனை தரிசிக்கும் அமித் ஷா
அங்கிருந்து கார் மூலம் 10.10 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலில் உள்ள நீலவேணி அம்மன் கோயிலில் விளக்கேற்றி தரிசனம் செய்கிறார்.
காமராஜர் சிலைக்கு மரியாதை
இதன்பின் இந்து கல்லூரியிலிருந்து செட்டிகுளம் சந்திப்பு வழியாக திறந்த வாகனத்தில் பொதுமக்களைச் சந்திக்கிறார். பின்னர் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்துகிறார்.
அங்கிருந்து வடசேரியில் உள்ள உடுப்பி ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு கார் மூலம் ஆயுதப்படை மைதானம் வரும் அவர் பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.
பாதுகாப்பு
அமித் ஷா வருவதை முன்னிட்டு மறவன்குடியிருப்பு ஹெலிகாப்டர் மைதானம், சுசீந்திரம் கோயில், இந்து கல்லூரி, வேப்பமூடு காமராஜர் சிலை, உடுப்பி ஓட்டல் ஆகிய இடங்களை காவல் துறை அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.
திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின் அபினவ் உத்தரவின்பேரில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.