தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை…குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு..! - sounther district rain

Kanniyakumari Rain: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 4:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை

கன்னியாகுமரி:தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழக முழுவதும் குறிப்பாக 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கொட்டாராம், பேச்சிப்பாறை உட்பட்ட மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி முள்ளங்கினாவிளை பகுதியில் 50 மில்லி மீட்டர் மழையும் குருந்தன்கோடு பகுதியில் 46 மில்லி மீட்டர் மழையும், கொட்டாரம் பகுதியில் 43 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 45 அடியை எட்டி உள்ளது.

இதேபோன்று, 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 74 அடியை எட்டி உள்ளது. மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகள் நிரம்புவதால் அணைகளிலிருந்து உபரிநீர் திறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நாகர்கோவில் மற்றும் பழையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது. நாகர்கோவில் அருகே ஊட்டு வாழ் மடம் பாறைக்காமடை தெரு, ரயில்வே காலணி போன்ற பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புக்குள் தண்ணீர் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் தடிகாரண்கோணம், கீரிப்பாறை, கொட்டாரம், மைலாடி உட்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

வழுக்கம்பாறை, அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்கள் உடைந்து நீர் வெளியேறியதால் சாலை போக்குவரத்து ஒரு சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுக்குளம், நயினார் குளம் ஆகிய பகுதிகளிலிருந்து மழை நீர் வெளியேறியதால் குடியிருப்புகளிலிருந்து வெளியேற முடியாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் தொடர் கன மழை.. அரக்கோணத்தில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை!

ABOUT THE AUTHOR

...view details