கரோனா பாதிப்பு தொடராமல் இருக்க அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் அடங்கியுள்ளனர். பள்ளி தான் விடுமுறை விட்டாச்சே, நமக்கென்ன என்று இருக்காமல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவிகளின் குடும்பங்களுக்கு நேரடியாகச் சென்று உதவி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் ஏழைகள் ஆவார்கள். பல மாணவர்கள் பெற்றோர் இல்லாதவர்கள். இந்த ஊரடங்கு நேரத்தில், தங்கள் பள்ளி மாணவர்கள் உணவுக்கு திண்டாடுவார்களே எனக் கருதி, அவர்களுக்கு உதவ ஆசிரியர்கள் சிலர் முன் வந்தனர்.
தலைமை ஆசிரியை பாமினி, ஆசிரியர்களுடன் கலந்து பேசி, பெற்றோர் இல்லாத மாணவர்கள், ஏழை மாணவ, மாணவிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு உதவ முன்வந்தனர். அரிசி, மளிகை பொருட்களை வாங்கி மாணவர்களின் குடும்பங்களுக்கு தெரியாமல் இன்று காலை முதல், மாணவ - மாணவிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கினர்.
ஏழ்மையில் வாடும் மாணாக்களுக்கு உதவிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! திடீரென தங்கள் வீடுகளுக்கு ஆசிரியர்கள் வந்ததும் குழந்தைகளும், பெற்றோர்களும் மகிழ்ச்சியில் வரவேற்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடங்களை மட்டும் சொல்லித் தந்த ஆசிரியர்கள் மத்தியில், தற்போது உள்ள 144 தடை உத்தரவில் வறுமையிலுள்ள மாணவர்களை கணக்கெடுத்து குடும்பங்களுக்கு உதவி செய்த ஆசிரியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்.