தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அன்னாசி பழங்களை அரசே நேரடிக் கொள்முதல் செய்ய வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை - covid-19 curfew

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அன்னாசி பழ விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Government should make direct purchases of pineapples - farmers demand
அன்னாசிப் பழங்களை அரசே நேரடிக் கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

By

Published : May 14, 2020, 10:19 AM IST

கரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்திற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உணவு உற்பத்திக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்களித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செய்த விளைப்பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதிலும், கொள்முதல் செய்வதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் விவசாயிகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம், பேச்சிப்பாறை, அருமனை, தடிக்காரகோணம், சிற்றாறு போன்ற பல்வேறு மலையோரப் பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் அளவில் வழக்கமாக, அன்னாசி பழங்கள் பயிரிடப்பட்ட வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யப்படும் அன்னாசி பழங்களின் விற்பனையை நம்பி பதினைந்தாயிரம் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர்.

ஆனால், தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏலம் எடுக்கும் கேரள வியாபாரிகள் யாரும் பழங்களை வாங்க முன்வரவில்லை. மேலும், போக்குவரத்து வசதியில்லாததால் டெல்லி, அகமதாபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்குச் செய்யப்பட்டுவந்த ஏற்றுமதியும் ஊரடங்கு காரணமாக முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் அறுவடை செய்யப்படும் அன்னாசி பழங்கள் தேக்கமடைந்துள்ளன.

மறுபுறம், அன்னாசி பழங்கள் வெட்டப்படாமல் செடியிலேயே இருப்பதால் அரைகுறையாய் பழுத்து, அழுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏலம் விடுவதற்கே பயனற்றதாகியுள்ளது. அப்படியே விற்பனைக்கு எடுத்துச் சென்றாலும் போக்குவரத்து செலவு, வாடகை, கூலி என எல்லாம் போக பழங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

அன்னாசி பழ விவசாயம்

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய குலசேகரத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், “144 தடையால் உள்ளூர் வியாபாரமும் முற்றிலும் முடங்கியுள்ளது. அன்னாசி விவசாயத் தோட்டங்களில் மலைக்கிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசி, பழங்குடியின மக்கள் அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர். தற்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால், அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில், தற்போது அறுவடை செய்த பழங்கள் கிலோவுக்கு வெறும் 7 ரூபாய்க்கு மட்டும் விலைபோகிறது. பல விவசாயிகள் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்துவந்த காரணத்தால் குத்தகை செலுத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என தன்னுடைய வேதனையைத் தெரிவிக்கிறார்.

பொருளாதார ரீதியில் பெரும் இன்னலுக்குள்ளாகி, நிற்கும் அன்னாசி பழ விவசாயிகளின் துயர் துடைக்க, விளைந்த அன்னாசி பழங்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க :'அரசுகளுக்கு எங்களைப் பற்றி கவலையும் இல்லை, கருணையும் இல்லை' - வாழை விவசாயிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details