கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கீரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி விமலா (43). இவர்களது உறவினர்கள் இறச்சகுளம் பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களை பார்க்க இன்று காலை விஜயகுமாரும், அவரது மனைவி விமலாவும் கீரிப்பாறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.
அவர்கள் இறச்சகுளம் சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது நாகர்கோவிலில் இருந்து ஞாலத்திற்கு செல்லும் அரசுப்பேருந்து, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் நேராக மோதியதில், கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் விமலா சம்பவ இடத்திலே துடி துடித்து உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த விஜயகுமாரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூதப்பாண்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
பின்னர் விபத்தில் இறந்த விமலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் லேசான காயம் அடைந்த விமலாவின் கணவர் விஜயகுமார் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.