கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தக்காளிவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்லின். இவர் சம்பளத்திற்கு ஜே.சி.பி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக ஜே.சி.பி. வாகனம் ஒன்றை வாங்கி சொந்தமாக தொழில் செய்து வந்தார். ஒரு ஜே.சி.பி இயந்திரம் வாங்கிய சிறிது காலத்திலேயே, புதிதாக மூன்று ஜே.சி.பி.வாகனம், இன்னோவா கிறிஸ்டா மற்றும் மாருதி பிரீஸா என ஆறு வாகனங்களை வாங்கி மற்றவர்கள் இவரை பார்த்து வியக்கும் வகையில் தொழிலதிபராக வலம் வந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜெர்லின் குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'கருங்கல் காவல் நிலையத்தில் உள்ள சிறப்பு துணை ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய இருவரும் ரவுடி கும்பலுடன் வந்து தன்னை மிரட்டி நாகர்கோவில் நெல்லை நெடுஞ்சாலையில் ஒரு பகுதிக்கு கடத்திச் சென்றனர்.
அப்போது, நீ ஜே.சி.பி ஆபரேட்டராக பணி புரியும் போது தங்க புதையல் கிடைத்துள்ளது. அதை வைத்து சொகுசு கார் மற்றும் ஜே.சி.பி வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறாய். எனவே, இதில் எங்களுக்கு பங்கு தந்தால் வெளியே சொல்லாமல் நமக்குள்ளேயே முடித்துக் கொள்வோம் என கூறியதுடன் தனது நகைகள் மற்றும் சொகுசு கார்களில் இரண்டையும் பறித்து சென்று விட்டனர்' என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.