கன்னியாகுமரி: வேர்கிளம்பியை அடுத்த மாத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின். டிப்ளமோ முடித்துவிட்டு வெல்டராக பணியாற்றும் இவருக்கு அணைக்கரை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 19-வயதான ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
நட்பு நாளடைவில் காதலமாக மாறிய நிலையில் இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவினிடம் கூறியுள்ளார். பிரவினும் தனது பெற்றோருடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து வைக்கலாம் என ஜெஸ்லின் வீட்டார் கூறியுள்ளனர்.
இதனால், நெருக்கம் அதிகரித்த இருவரும் தனிமையாக ஆங்காங்கே தம்பதி போல் சுற்றித் திரிந்ததோடு மாறி மாறி கிப்ட் கொடுத்து காதலை வளர்த்துள்ளனர். இந்நிலையில் ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவின் உடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டதால், அவரது நடத்தையில் பிரவினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் பிரவின், ஜெஸ்லினை கண்காணிக்க தொடங்கினார். இதில் ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதையும் அவருடன் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி திரிவதையும் கண்டறிந்தார். அதன் பிறகு பிரவின், ஜெஸ்லினை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் பிரவினிடம் தான் தற்போது ஜெனித்தை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கூறியதோடு தன்னை மறந்து விடுமாறு கூறியுள்ளார்.