கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூரைச் சேர்ந்த தம்பதியின் 15 வயது மகள் அந்த பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்குச் சென்று வரும்போது பக்கத்து ஊரான நெடுவிளையை சேர்ந்த செல்வராஜா மகன் தபின் அறிமுகமாகி உள்ளார். அவருக்கு 20 வயதாகிறது.
அவர் தொடர்ந்து சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும் சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தபின் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதால் மாணவி அவரை காதலித்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி தபினுடன் சிறுமி சென்றதால் பெற்றோர்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
சிறுமியை அழைத்துச் சென்ற தபின் ஒரு கோயிலில் வைத்து அவரை திருமணம் செய்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார் . தபின் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகக் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்படி அவர்கள் நேற்று நெடுவிளையில் தபின் வசித்து வந்த வீட்டுக்குச் சென்று பார்த்த போது அங்கு தபின் இல்லை. சிறுமி மட்டுமே இருந்தால் அவரை மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமிக்குத் திருமண வயது ஆகவில்லை என்பதும் தபின் ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கன்னியாகுமரி காவல்துறை போக்சோ பிரிவின் மீது வழக்குப் பதிவு செய்து தபினை தேடி வருகின்றனர். மேலும், சிறுமியைக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.