கன்னியாகுமரி: மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர் குறித்தும் இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனக்கு உடல் நலம் சரியில்லை என கூறியதால் சிறையிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் தனக்கு இதய பிரச்னை இருப்பதால் வெளியே அழைத்துச் சென்று நெல்லை அரசு பொது மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்கும்படி சிறை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை வெளியே அழைத்துச் செல்ல சிறை நிர்வாகம் தயங்கியது.
இதய சிகிச்சை பரிசோதனை
இதையடுத்து, நெல்லை அரசுப் பொது மருத்துவமனையில் இருந்து இதய பிரிவு மூத்த மருத்துவர்களை சிறைக்கு அழைத்து வந்து ஜார்ஜ் பொன்னையாவுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இசிஜி போன்ற கருவிகளை கையில் எடுத்து வர முடியாது என்பதால் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க வர மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, வேறு வழியின்றி நேற்று (ஜூலை 30) ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறையில் இருந்து நெல்லை அரசு பொது மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சுமார் 2 மணி நேரம் புற நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் அவரை பரோசோதித்தனர்.