தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் மணல் கடத்தப்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு - கேரள எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. குமரி மாவட்டம் வழியாக, கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதைத் தடுக்க, 33 இடங்களில் சோதனை சாவடிகள்அமைக்கப்பட்டது.
கையூட்டு வாங்கிய நான்கு காவலர்கள் கைது இந்நிலையில், சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் அலட்சியமாக இருப்பதைத் தடுக்கும் வகையிலும், குமரி மாவட்டத்துக்குள் முறைகேடாக மணல் கொண்டு வருவதைத் தடுக்கவும், காவல்துறை சார்பில் எஸ்.ஐ செந்தில்வேல் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது.
ஆரல்வாய் மொழி சாவடி அருகே புதுச்சேரியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியில் முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, செந்தில்வேல் தலைமையில் அந்த லாரியை பறிமுதல் செய்து, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த வனிதா ராணி வழக்கு பதிவு செய்யாமல், பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மணல் கொண்டு வந்தவர், தன்னிடம் முறையான ஆவணங்கள் இருந்தும், காவல் துறையினர் பணத்துக்காக தன்னிடம் பேரம் பேசியதாகக் கூறி, லஞ்ச ஒழிப்பு, காவல்துறை உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி, ஆய்வாளார் வனிதா ராணி, பறக்கும் படை சார்பு ஆய்வாளர் செந்தில்வேல், காவலர்கள் ரமேஷ், ஜோஸ் ஆகிய நான்கு பேரை காவல்துறை பணியில் இருந்து நீக்கம் செய்ய, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.