MGR Birthday: ஆயிரம் அடி நீளத்திற்கு பேனர் வைத்து கின்னஸ் சாதனை முயற்சி... நாகர்கோவில்:முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என தமிழ்நாடு மக்களால் என்றும் அன்போடு அழைக்கபடுபவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின். 106வது பிறந்த நாளை சரித்திர நிகழ்வாக கொண்டாட எண்ணிய அவரது ரசிகர்கள், கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். கனனியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த கலப்பை மக்கள் இயக்கத்தினர் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கின்னஸ் சாதனை முயற்சியாக கொண்டாடப்பட்டது.
கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் திரைப்பட இயக்குனர் பி.டி. செல்வகுமார் தலைமையில் அணி திரண்ட பெண்கள் உள்ளிட்டோர், சாலையில் ஆயிரம் அடி நீளத்திற்கு எம்.ஜி.ஆரின். பேனரை வைத்து கின்னஸ் முயற்சியில் ஈடுபட்டனர். பேனரில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் அங்கம் வகித்தனர்.
வேப்பமூடு சந்திப்பில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் உள்ளிட்டோர் ஆயிரம் அடி நீள எம்.ஜி.ஆரின் பேனரை கையில் கொண்டு அணிவகுத்து நின்றனர். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கலப்பை மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
ஆயிரம் அடி நீள பேனரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஏராளமான புகைப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்ததை காண ஏராளமான மக்கள் திரண்டனர். மேலும் அருகாமை கிராம மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து பேனரை பார்த்து சென்றனர்.
தொடர்ந்து பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர், திரைப்பட இயக்குனர் பி.டி.செல்வகுமார்,"மக்கள் சேவையில் மிக உயர்ந்த இடத்தை பெற்ற எம்.ஜி.ஆரின் புகழை, இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:சே குவேரா மகள் அலெய்டா குவேரா சென்னை வருகை; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!