கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வரும் வெளிநாட்டுப் பறவைகள் மார்ச், ஏப்ரல் வரை இங்குள்ள நீர் நிலைகளிலும், மரங்களிலும் தங்கியிருக்கும். குறிப்பாக ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் பறவைகள் இடம்பெயர்ந்து இங்கு வருகின்றன.
கடும் கோடைகாலத்திலும்கூட குமரியிலுள்ள குளங்கள், உப்பளங்கள், ஆறும் கடலும் சேரும் பொழிமுகங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்த நீர்நிலைகளில் பறவைகளுக்குத் தேவையான புழுப்பூச்சி, மீன்கள் உள்ளிட்ட உணவுகளும் இயற்கையாகவே கிடைப்பதால் பெரும்பாலான பறவைகள் இங்கு தஞ்சம் புகுவது வழக்கம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தற்போது வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து தொடங்கியுள்ளது.
கூழக்கடா, செங்கால் நாரை, நத்தைக் கொத்தி நாரை, வர்ண நாரை, ஊசி வால் வாத்து உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன.
வெளிநாட்டுப் பறவைகளின் வருகையை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து அலாதி இன்பம் பெருகின்றனர். இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ரசபாதி எனலாம். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
ராஜாக்கமங்கலம், சுவாமிதோப்பு, மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்கள், பொழிமுகங்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வனத் துறையினர், கல்லூரி மாணவ, மாணவியர் இணைந்து பறவைகளைக் கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பறவைகளைக் கணக்கெடுக்கும் வனத் துறை இது குறித்து இயற்கை ஆர்வலர் டேவிட்சன் கூறுகையில், "இந்தாண்டு வழக்கத்தைவிட பறவைகள் வருகை கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. வன அழிவு, நன்னீர் பகுதிகள் ஆக்கிரமிப்பு காரணமாக பறவைகள் வரத்து குறைந்துள்ளன.
வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் இடங்களைச் சூழல் சுற்றுலா மையங்களாக அறிவிக்கக் கோரியும் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தனது மனக் குமுறலைப் பதிவுசெய்தார்.
இதையும் படிங்க: 'உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் வலிமைப்படும்' - பள்ளியில் அமைச்சர் சீனிவாசன் உரை