ஆட்டை வேட்டையாடிய புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறை கன்னியாகுமரிமாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு சிலோன் காலனி, மல்லன் முத்தன் கரை அரசு ரப்பர் கழக குடியிருப்பில் சுமார் 168 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த மக்கள், அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்து வருகின்றனர். அந்த பகுதியைச் சேர்ந்த, மோகன்தாஸ் என்பவர் தனது வீட்டில் தொழுவம் அமைத்து, ஆடு வளர்த்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பாக தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை புலி அடித்துக் கொன்றது.
இதனால், சிலோன் காலனி, மல்லன் முத்தன் கரை அரசு ரப்பர் கழக குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் மக்கள் அதிர்ச்சியடைந்து அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில், புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது, மல்லன் முத்தன் கரை என்ற இடத்தில் ஒரு புதர் பகுதியில் ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், புலியின் காலடி தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் வனத்துறை விஷேச 10 தானியங்கி கேமராக்களை மரங்களில் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதரிடம் விசாரித்த போது, ''சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்புப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக குடியிருப்பு மக்கள் கூறியதையடுத்து மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் அப்பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆய்வுகள் செய்தோம். தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் தடயங்களை முழுமையான அளவில் சேகரிப்பதில் சிக்கல் உள்ளது. எனினும் விலங்கின் கால் தடத்தை கண்டுபிடித்து உள்ளோம். இது புலியா அல்லது சிறுத்தையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
மேலும், காணாமல் போன ஆட்டின் தோல் மற்றும் குடல் பகுதிகளையும் கைப்பற்றி உள்ளோம். தற்போது இங்கு 10 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. விஷேச தன்மை கொண்ட இந்த கேமராவில் புலி அல்லது சிறுத்தை என எதுவாக இருந்தாலும் சரிவர பதிவாகும். ஒரு விலங்கு அப்பகுதியில் வருகிறது என்றால் புகைப்படம் எடுப்பதும் அந்தப் பகுதியில் சுற்றித் தெரியும் என்றால் 30 நிமிடங்கள் வீடியோ காட்சி பதிவு செய்யும் தன்மையும் வாய்ந்தது. இதனை கண்காணிப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த விலங்காக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலிருந்து காட்டுக்குள் துரத்தும் பணிகளை வனத்துறை ஈடுபடும்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பில் வசித்து வரும் ஞானசுந்தரம் என்பவர் கூறும்போது, ''சிற்றாறு பகுதியில் நடமாடுவது புலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிறுத்தை மற்றும் புலிக்கான வித்தியாசங்கள் மக்களுக்கு நன்றாக தெரியும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கால் தடம் புலியின் கால் தடமாக தான் உள்ளது. மேலும் புலியானது மல்லன் முத்தன் கரை காணி குடியிருப்பை ஒட்டிய ரப்பர் கழக கூப்பு எண் 49 பகுதியில் உள்ளது. ஒரு மிளாவையும் புலி அடித்து உள்ளதாகவும் பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புலி நடமாட்டம் காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் அச்சம் காரணமாக பால் வெட்டும் வேலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் காலையிலும் மாலையிலும் சுமார் 1 முதல் 2 கி.மீ., தூரம் நடந்து குடியிருப்பு பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே வனத்துறையினர் புலியை கண்காணித்து அதனை காட்டுப் பகுதிக்குள் துரத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கொடைக்கானல் சாலையில் ஹாயாக உலா வந்த காட்டெருமைக் கூட்டம்!