கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்திய புலியை கூண்டு வைத்து பிடித்த வனத்துரையினர் கன்னியாகுமரி:மாவட்டம் சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி, 45 நாட்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள பழங்குடியின குடியிருப்புகளில் புலி புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. கடந்த 1 மாதத்தில் மட்டும் 6 ஆடுகள் மற்றும் 2 மாடுகளை கொன்று வேட்டையாடியது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தொழிலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இதற்கிடையே புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
25 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் புலி நடமாட்டம் அதிகமாக உள்ள சிற்றாறு பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. இதுதவிர, புலியை பிடிப்பதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற எலைட் படையினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது.
டுரோன் கேமரா மூலம் புலி நடமாட்டத்தை கண்டறிந்து பிடிக்கும் பணியும் நடந்தது. இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வகையில் மருத்துவர் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். ஆனால் புலி ஒவ்வொரு இடமாக மாறி மாறி சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அதனை பிடிப்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது வந்தது. இதனால் வனத் துறையினரின் ஒவ்வொரு முயற்சியும் பலன் அளிக்காமல் போனது.
இந்நிலையில் கல்லறை வயல் பகுதியில் புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்ததாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் குழுவினர் உடன் முதுமலை பழங்குடியினரும் சேர்ந்து நேற்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) காலை முதல் கல்லறை வயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டபோது, புலியின் நடமாட்டத்தை கண்டுபிடித்த வனத்துறையினர், மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் புலி மீது மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இதனையடுத்து புலி பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆனால் வனத்துறையினர் அவர்களை அந்த பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மருத்துவ குழுவினர் புலியை பரிசோதனை செய்தனர் பின்னர் புலியை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. ஒன்றரை மாதமாக அச்சத்தில் உறைந்து இருந்த மக்கள் தற்போது புலி பிடிக்கப்பட்டதால் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இதையும் படிங்க :நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு பின்னடைவு... எதிர்க்கட்சிகள் பக்கம் சென்ற கூட்டணி கட்சி!