கன்னியாகுமரி:தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள காடுகளில் ராஜநாகம் அதிமாக உள்ளன. தாய்லாந்து மற்றும் இந்தியாவிலும் அதிமாக காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் வாழ்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட காடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. பெரும்பாலும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கும் ராஜநாகம் நீர் நிறைந்த பகுதிகளில் வாழ்கின்றன.
தாய்லாந்து நாட்டில் இயங்கும் செஞ்சிலுவை சங்கமும் இந்திய மத்திய ஆராய்ச்சி மையமும் இதன் விஷத்தை முறிக்க மருந்துகள்
கண்டுபிடித்துள்ளது. இதுவரை இரண்டு மருந்துகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டு மருந்துகளும் தேவைக்கு ஏற்ப கிடைக்காததால் பாம்பு கடி விஷத்தால் பலரும் இறந்து விடுகின்றனர்.
கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பான ராஜநாகம் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வன பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் காணப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தடிக்காரண் கோணம் அருகே அரசு ரப்பர் கழக லோயர் காலனியில் 13 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பிடிபட்டது. அந்த பீதி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அடங்குவதற்குள் மீண்டும் பால்குளம் அருகே ரப்பர் தோட்ட குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் காணப்பட்டுள்ளது.
குடியிருப்பு மக்கள் அழகியபாண்டிபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு மிகப்பெரிய பாம்பு ஒன்று நுழைந்து விட்டதாக
தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வனத்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்குச் சென்று மூன்று மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். அது கொடிய விஷத்தன்மை கொண்ட 12 1/2 அடி நீளம் கொண்ட ராஜ நாகம்
என்பது தெரியவந்தது.