பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி - தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி
கன்னியாகுமரி: மதுரையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரை விளக்குத்துாண் அருகே தெற்குமாசிவீதி நவபத்கானா தெருவில் பழமையான கட்டடத்தில் இயங்கிய சஞ்சய் டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கட்டடம் இடிந்தது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் 39 வயதான சிவராஜன், 30 வயதான கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாயினர்.
இதில் காயமடைந்த வீரர்கள் கல்யாண்குமார், சின்னகருப்பு ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு தீயணைப்பு வீரர்கள் பலியான சம்பவம் தமிழ்நாடு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பலியான இரு தீயணைப்பு வீரர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இருவரது புகைப்படங்களை வைத்து தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் வீரர்கள் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.