கன்னியாகுமரிமாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முக்கியமாக கோதையாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு சுற்றுலாப்பயணிகள் அமர்ந்து உணவருந்தும் இடங்கள், பூங்காக்கள், சிறுவர்கள் குளிக்கும் நீச்சல் குளம் ஆகியவை தண்ணீரில் மூழ்கி ஆறுபோல் காட்சியளிக்கிறது. இதனைத்தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மாம்பழத்தார் அணைப்பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று ஆணைக்கிழங்கு பகுதியில் 74 மில்லி மீட்டர், அடையாமடையில் 73 மில்லி மீட்டர், களியலில் 71 மில்லி மீட்டர், பேச்சிப்பாறை, பாலமோர் ஆகிய இடங்களில் தலா 71 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.