கன்னியாகுமரி:ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஹாங்காங் நாட்டுக் கப்பல் குறித்து குளச்சல் கடலோர காவல் குழும காவல்துறையிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குமரி மீனவர்கள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துச் சேதமடைந்த விசைப்படகிற்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என முறையீடு வைத்துள்ளனர்.
அதோடு, இது குறித்துப் புகாரளித்து ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் கடத்தி வருவதாகக் கருஞ்சட்டை அணிந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு அளித்துள்ளனர். மேலும், மீனவர்களுக்கு எதிராகவும், கப்பல் நிறுவன அதிபர்களுக்கு ஆதரவாகவும் குளச்சல் கடலோர காவல் குழும போலீசார் செயல்படுவதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அருட்பணியாளர் தேவாலயத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிதாசன் என்பவருக்குச் சொந்தமான ரூபி என்ற விசைப்படகில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவைச் சார்ந்த 9 மீனவர்களுடன் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஆழ்கடலில் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சீனாவின் ஷான்ஞ்சியாங் என்ற துறைமுகத்திலிருந்து அவ்வழியாகத் துபாய் சென்று கொண்டிருந்த ஹாங்காங் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ பிரண்ட்டியர் டேங்கர் (NEW FRONTIER SHIP) கப்பலானது விசைப்படகின் மீது நேருக்குநேராக மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சேதமான விசைபடகுடன் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சில விசைப்படகு மீனவர்கள் மீட்டனர். பின்னர், ராட்சத கப்பல் மோதியதால் நொறுங்கிய அந்த விசைப்படகை 5 நாட்களாக கடலில் கயிறு கட்டி இழுத்து தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வந்து கரை சேர்த்தனர்.
சேதமடைந்த விசைப்படகு தேங்காய் பட்டணம் மீன் பிடிதுறை முகத்திற்கு வந்து சேர்ந்த போது தண்ணீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒன்பது மீனவர்களது உயிர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தி, மீனவர்களுக்குப் பல லட்ச ரூபாய் பொருள் இழப்பையும், பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பையும், மனதளவில் மீனவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஹாங்காங் நாட்டு நியூ பிரண்டியர் கப்பல் மீதும், கப்பல் மாலுமி மீதும், கப்பல் உரிமையாளர் மீது குளச்சல் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.