குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளைக் கிழக்கு கடற்கரை பகுதிகள் மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகள் என 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் மீன்களில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 61 நாள் மீன்பிடி தடை காலம் அமலிலிருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 15 ஆம் தேதி உடன் இந்த மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.
அதே வேளையில் மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 1 ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதலமாக கொண்டு சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடித்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குளச்சல் துறைமுகத்தை மட்டும் நம்பி சுமார் 600 முதல் 700-க்கும் மேலான கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளும் உள்ளன. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு அரபிக்கடல் பகுதியில் சுமார் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் வேலையில், குளச்சல் துறைமுகத்தில் தங்கு தளமாக கொண்டு செயல்பட்டு வரும் 250 விசைப்படகுகளையும் ஒரே நேரத்தில் இந்த துறைமுகத்தில் கட்டுவதற்கு இடவசதி இல்லை. தற்போது இந்த துறைமுகத்தில் சுமார் 40 முதல் 50 விசைப் படகுகளை மட்டுமே நிறுத்தி வைக்க முடியும்.
ஆகையால், மீதம் உள்ள விசைப்படகுகளை தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலும், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள துறைமுகங்களிலும் வாடகை கட்டணங்கள் செலுத்தி நிறுத்தி வைக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படுகிறது. மேலும் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளில் பழுது பார்க்கும் பணிகளை செய்வது வழக்கம். ஆனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பழுது பார்க்கும் பணிமனையும் இல்லை.
ஆகவே குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 250 முதல் 300 படகு விசைப்படகுகள் நிறுத்தி வைப்பதற்கும், சுமார் 600 முதல் 700 க்கு மேற்பட்ட கட்டு மரங்கள் அந்தப் பகுதியில் நிறுத்தி வைப்பதற்கும் வசதியாக விரிவாக்கம் செய்து தர வேண்டும் என்று அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.