கன்னியாகுமரி:தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்ததைத்தொடர்ந்து மீனவ சங்கப் பிரதிநிதிகள் அதற்குக்காரணமான துறைமுகத்தின் முகத்துவாரத்திலுள்ள மணற்குவியல்களை அரசு அகற்ற தவறியதைச் சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தேங்காய்பட்டணம் மீன்படித் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் கட்டுமான குளறுபடிகள் காரணமாக முகத்துவாரத்தில் அதிகளவில் மணல் தேங்குவதாகக் கூறப்படுகிறது. இதனால், கரைக்கு திரும்பும் மீனவர்களின் படகுகள் அங்குள்ள மணல் குவியலின்மீது மோதி இதுவரையில் 27 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனவே, மீனவர்களின் உயிரிழப்பைத் தடுக்க தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்யவும் முகத்துவாரத்தை ஆழப்படுத்தவும்கோரி பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். ஆனால், அக்கோரிக்கைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, சில தினங்களுக்கு முன் பூந்துறையைச்சேர்ந்த சைமன் என்ற மீனவர் கரை திரும்பும்போது, துறைமுகத்தின் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, முகத்துவாரத்தை ஆழப்படுத்தி கட்டுமானப் பணிகளை மறுசீரமைப்பு செய்யக்கோரி அப்பகுதி மீனவர்கள் பூத்துறையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அரசு அலுவலர்கள் தரப்பில், 2 நாட்களில் முகத்துவாரத்திலுள்ள மணற்குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், 4 நாட்களுக்கும் மேல் ஆகியும் அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டிக்கும் விதமாக மீண்டும் இன்று (ஆக.16) 18 மீனவ கிராம சங்கப் பிரதிநிதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தரப்பில் கொடுக்கபட்ட வாக்குறுதி வெற்று வாக்குறுதி என்றும்; மீனவர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் மீனவப்பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர். மேலும், துறைமுக நுழைவு வாயிலை தூர்வாரி பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தித் தரும் வரை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் இதையும் படிங்க:
ரூ.43.50 கோடி மதிப்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்!