கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில், வள்ளங்களில் மீன் பிடிக்கச் செல்லும் தொழிலாளர்களுக்கு 300 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்ட மீன்பிடி வள்ளங்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 300 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல், மாதத்திற்கு 150 லிட்டர் முதல் 250 லிட்டர் வரை மட்டுமே மீன் துறையினர் வழங்கி வருகின்றனர்.
இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பதிவு செய்யப்பட்ட அனைத்து வள்ளங்களுக்கும், மாதம் 300 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் மீனவர்களுக்கு, கரோனா நிவாரண நிதி, பேரிடர் கால நிவாரண நிதி போன்றவை முறையாக கிடைப்பதில்லை. பல இடங்களில் மீனவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் இத்தகைய நிவாரணங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள சுமார் 8 கிராமங்களை மையப்படுத்தி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இதுவரை நிரந்தர உதவி இயக்குநரோ, தேவையான ஊழியர்களோ இல்லை. ஆகையால் உடனடியாக அங்கு ஊழியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.