கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் மேற்கு கோட்டைப் பகுதியில் வசித்து வருபவர் சிவன். தச்சுத் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஐந்து வருடங்களுக்கு முன் இவரது மகன் விஷ்ணு (26) காதல் திருமணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அன்று முதல் சிவன் வீட்டு மாடிப்படிக்கட்டு, இடை வெளியில் தார்பாய் கொண்டு சிறிய கொட்டகை அமைத்து அதில் வசித்து வந்துள்ளார். மேலும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சிவன் நேற்றிரவு மாடிப் படிக்கட்டில் அமைந்துள்ள சிறிய கொட்டகையில் சென்று தூங்கியுள்ளார்.
இன்று அதிகாலை அக்கம் பக்கத்தினர், அந்த வழியாகச் செல்லும் போது சிவன் வீட்டு மாடி படிக்கட்டில் சாம்பல்கள் கிடப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிவன் படுத்த நிலையிலேயே, சந்தேகத்துக்கு இடமான முறையில், உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.