கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடையைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் உறவினர் மூலமாக ஆரல்வாய்மொழி அருகே தேவ சகாயம் மவுண்ட் பகுதியில் வசித்து வரும் மைக்கேல் சபரி முத்து என்பவர், வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புகிறார் என்பதை அறிந்துள்ளார்.
அதன் அடிப்படையில் அவரை உறவினர் மூலம் அவரை ஜெகன் அணுகியுள்ளார். அப்போது அவர் அபுதாபியில் ஆயில் கம்பெனியில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதற்காக முதல் கட்டமாக நான்கு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வங்கி காசோலை மூலமாக 4 லட்சம் ரூபாயை ஜெகன், மைக்கேல் சபரி முத்துவிடம் கொடுத்துள்ளார். பின்னர் ஒரு மாதத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகவும் சபரி முத்து உறுதி அளித்துள்ளார்.
ஆனால் எட்டு மாதங்கள் ஆகியும் இதுவரை விசா வாங்கி தரவில்லை என்றும், இதனால் 4 லட்ச ரூபாய்க்கு வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்படுவதாகவும் ஜெகன் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் சபரி முத்து பணத்தை தர முன் வரவில்லை. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஜெகன் புகார் அளித்துள்ளார்.