பயிர் காப்பீட்டு தொகையை கொள்ளையடிக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கன்னியாகுமரி:பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் என்பது இயற்கை சீற்றங்களால் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்தால், அதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக விவசாயிகள் நஷ்ட ஈடு பெறுவதற்கு ஒரு வழிமுறையாக கருதப்பட்டு வருகிறது.
ஆனால் சமீப நாட்களாக பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் என்பதே ஒரு லாபகரமான அதாவது, ஒன்றுக்கு பல மடங்கு லாபம் பார்க்கும் நிறுவனமாகவே மாறி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முன்னர் இயற்கை சீற்றங்களால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது என்றால் முதலில் தாலுகா அளவில் சேதங்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்து வந்தது.
பின்னர், பிர்கா என்று சொல்லப்படும் மூன்று அல்லது நான்கு வருவாய் கிராமங்களில் சேதம் இருந்தால் இழப்பீடு வழங்கலாம் என்று இருந்தது. இதனை அடுத்து வருவாய் கிராமங்கள் அளவில் பயிர்கள் சேதமடைந்து இருந்தால், அதற்கு இழப்பீடு வழங்க முடியும் என்ற உத்தரவு இருந்தது. இப்போது மீண்டும் பிர்காவில் இருந்தால் வழங்கலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.
பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸைப் பொறுத்தவரை, அதற்காக பிரீமியம் செலுத்தும் அனைத்து விவசாயிகளும் தங்கள் பயிர்கள் சேதம் அடையும்போது காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீட்டைப் பெற முடியும். ஆனால், இப்போது கிராம விவசாயி ஒருவர், பயிர் பாதுகாப்பு காப்பீடு செய்ய வேண்டும் என்றால் கன்னி பூவுக்கு கிடையாது என உத்தரவு நிலுவையில் உள்ளது.
இது தமிழ்நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும் என்றும், இரண்டாம் போக சாகுபடிக்கு மட்டுமே பயிர் பாதுகாப்பு காப்பீடு பிரீமியம் செலுத்த முடியும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கிராமங்களை எடுத்துக் கொண்டால், விபரம் அறிந்த விவசாயிகள் முதல் அனைத்து தரப்பு விவசாயிகளும் இயற்கை சீற்றங்களால் தங்கள் பயிர்கள் பாதிக்கப்படும்போது, அதற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டைப் பெற வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவரின் நிலத்தை மட்டும் பார்ப்பதற்கு பதிலாக, அந்த பிர்காவில் அதாவது 3 வருவாய் கிராமங்கள் முழுவதும் 33 சதவீத அளவிற்கு பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதா என கணக்கிட்ட பின்னர்தான் விவசாயிக்கு இழப்பீடு வழங்க முடியும் என்ற உத்தரவு விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு தனி நபரும் காப்பீடு நிறுவனத்திற்கு பிரீமியம் வழங்குவது தாங்கள் பாதிக்கப்படும்போது அதற்குரிய இழப்பை பெறும் ஒரே நோக்கத்திற்காகத்தான். ஆனால், தனி நபரிடமிருந்து பிரிமியம் பெற்று விட்டு, மூன்று கிராமங்களில் இழப்பீடு ஏற்பட்டால்தான் விவசாயிக்கு இழப்பீடு என்பது வியாபாரக் கொள்ளையில் நூதன கொள்ளை என்கின்றனர்.
விவசாயிகள் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் இந்த நூதன காப்பீடு கொள்ளை குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பயிர் பாசன ஆலோசனைக் குழு உறுப்பினர் செண்பக சேகரன் கூறியதாவது, “பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸுக்காக விவசாயி ஒருவர் ஒரு ஏக்கருக்கு 500 ரூபாய் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பணத்தைச் செலுத்தி வருகின்றனர்.
கன்னி பூ மற்றும் கும்ப பூ சாகுபடிகளில், தற்போது கன்னி பூவிற்கு இன்சூரன்ஸ் பணம் கட்ட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கன்னி பூ சாகுபடியின்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அதன் முழு பாதிப்பும் விவசாயிக்குத்தான். ஏற்கனவே நெற்பயிர் பாசனம் என்பது குறைந்து வரும் வேளையில், அரசின் இது போன்ற செயல்களால் விவசாயமே கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, தமிழ்நாட்டில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு கணக்குப்படி விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு காப்பீட்டுக்காக தமிழ்நாடு அரசு 1,375 கோடி ரூபாயும், மத்திய அரசு 824 கோடி, விவசாயிகளின் பங்களிப்பாக 120 கோடி ரூபாயுமாக மொத்தம் 2,319 கோடி ரூபாய் மூலதனம் ஆகிறது.
ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கப்பட்ட தொகையோ வெறும் 560 கோடி ரூபாய் மட்டும்தான். மீதமுள்ள 1,759 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு லாபமாக சென்று சேர்கிறது. பயிர் பாதுகாப்பு காப்பீட்டு நாள் பலன் விவசாயிகளுக்கா அல்லது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கா என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தி மத்திய, மாநில அரசுகள் பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் பொறுத்தவரை ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிர் பாதுகாப்பை பொறுத்தவரை காப்பீட்டு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 750 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதி - குமரி ஆட்சியர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்!