அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படிதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,201 ஊரக உள்ளாட்சிப் பதிவிகளுக்கான போட்டியில் 160 பேர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டதால் 1,041 பதவிகளுக்கு 3,590 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். முதற்கட்டமாக திருவட்டாறு, மேல்புறம், குருந்தன்கோடு, தக்கலை, ராஜாக்கமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடந்துவருகிறது.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 114 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.