கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், தீவிரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் மகளான ஆன்டிரிஸ் ரினிஜா (28), கருணை அடிப்படையில் அரசு வேலை வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அவரது மனுவை பரிசீலித்த அரசு, குமரி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியில் சேரும்படி உத்தரவிட்டது.