கன்னியாகுமரி:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில யானைகள் நடமாட்டம் இருந்து வந்தது இந்த யானைகள் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட திடல், கடுகரை, காட்டுப்புத்தூர் போன்ற மலை அடிவாரங்களில் உள்ள வாழை தோட்டங்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்தன. இதனை அடுத்து வனத்துறையினரும் அப்பகுதி பொதுமக்களும் யானைகளை விரட்டி காட்டிற்குள் அனுப்பினர்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக கோதையாறு வனப்பகுதியில் உள்ள மோதிர மலை, கோதமடக்கு, குற்றியாறு போன்ற பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வர துவங்கியுள்ளன. இதில் சமீபத்தில், ஈன்ற நான்கு குட்டிகளுடன் யானை கூட்டங்கள் அப்பகுதியில் சுற்றி வருகின்றன. மேலும், இந்த யானை கூட்டங்கள் வாகனங்கள் நடமாடும் சாலைகளிலும் அலைந்து திரிந்து வருவதால், அரசு மற்றும் பல்வேறு தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் குறிப்பாக, கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சபரிமலை சீசன் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் பத்தனம்திட்டை, ரானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் யானைகள் கூட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளான கோதையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள தச்சமலை, முடவன் பொற்றை, மோதிர மலை உட்பட 18-க்கும் மேற்பட்ட மலைப்பகுதிகளுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.
இந்த பகுதியில், மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமம். இந்த யானைகள் மலையோர பகுதிகளில் பயிரிடப்பட்டிருக்கும் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அரசு ரப்பர் தோட்டங்களில் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களை யானைகள் தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இதேபோல், தற்போது மீண்டும் கேரளா வன பகுதிகளில் இருந்து கோதையாறு மலையோர கிராமங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக படையெடுத்துள்ளன.
குறிப்பாக, இரவு நேரங்களில் பேச்சிப்பாறை, கோதையாறு சாலையில் யானைகள் கூட்டமாக நிற்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், அரசு ரப்பர் தோட்டங்களில் புதிய ரப்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு ஊடுபயிராக அன்னாசிப்பழம் பயிரிடப்பட்டு உள்ளதால் அன்னாசிப்பழ மணத்தில் கவரப்பட்டு யானைகள் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உள்ளது.