கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெனில் (33). மின்வேலை செய்யும் இவர் அருகில் உள்ள ஊரை சேர்ந்த மோனிஷா என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் (அக்.12) வீட்டில் தனியாக இருந்த ஜெனில் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்த போது அவர் தன் அறையில் உள்ள மின்விசிறியில் புடவையில் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து அங்கு வந்த காவல் துறையினர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளேச் சென்று அவரது சடலத்தை மீட்டனர். அவரது சட்டை பையில் இரண்டு பக்க கடிதம் ஒன்று இருந்தது.
அந்தக் கடிதத்தில், ஜெனிலின் மனைவி குடும்பத்தினர் அவர் தங்கி இருக்கும் தனது தங்கை ஜெனிஷா வீட்டை எழுதிக் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்தது குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவியின் குடும்பத்தினர் சில அடியாள்கள், ஆயுதங்களுடன் வந்து அவரை மிரட்டியதாகவும், பின்னர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் உதவியுடன் புகார் அளித்து வீட்டை எழுதிக் கேட்டதாகவும், தனது தற்கொலைக்கு மனைவியின் குடும்பத்தினரே காரணம் எனவும் அக்கடிதத்தில் ஜெனில் குறிப்பிட்டிருந்தார்.
ஜெனிலின் உடலை மீட்ட காவல் துறையினர் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஜெனில் எழுதி வைத்தக் கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனது அண்ணனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சகோதரி ஜெனிஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:மூதாட்டியிடம் நட்பு ரீதியாகப் பழகி தங்க நகைகளைத் திருடிய பெண் கைது