கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கே அவதியடைந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 பணம், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்தது.
அதன்படி கடந்த 2ஆம் தேதி முதல் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 42 ஆயிரத்து 986 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள், ரூ. 1000 பணம் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆனால் ரேஷன் பொருள்களை முழுமையாக கொடுக்க முடியவில்லை. குறிப்பாக புழுங்கல் அரிசி மிகக் குறைவாக இருப்பதால் புழுங்கல் அரிசி மற்றும் பச்சை அரிசி ஆகியவற்றை பாதி பாதியாக கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் ஏப்ரல் 14ஆம் தேதிவரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டதால், அந்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருள்கள் வாங்க குவிந்ததால் ஊழியர்கள் திண்டாடி வந்தனர்.