நெல்லை மாவட்டம், பழவூரைச் சேர்ந்தவர் பரமசிவம் (36). இவர், கன்னியாகுமரி மேற்கு ரத வீதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில், பரமசிவம் நேற்று இரவு தனது டிராவல்ஸ் நிறுவனம் முன்பு தனது சொகுசு காரை நிறுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், காலையில் வந்துபார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பரமசிவம் காரை பல இடங்களிலும் தேடியுள்ளார். ஆனால், எங்கு தேடியும் கார் கிடைக்காததால் வேறுவழியின்றி கன்னியாகுமரி காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில், தென்தாமரைகுளம் அருகேயுள்ள தேங்காய்காரன் குடியிருப்பைச் சேர்ந்த அஜித் (21), சேர்மத்துரை (19) ஆகிய இளைஞர்கள் இந்தக் காரை திருடியிருப்பது தெரியவந்தது.
பின், காவல் துறைாயினர் இருவரையும் வலைவீசி தேடிவந்த நிலையில், கையில் பணம் இல்லாததால் திருடிய சொகுசு காரை நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு, ரயில் நிலையத்தினுள் சென்ற இளைஞர்கள் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்றுள்ளனர். அப்போது, ரயில்வே காவல் துறையினரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர்.