கன்னியாகுமரி: கடந்த கரோனா காலத்தில் எங்கு செல்ல வேண்டுமானாலும் கரோனா பரிசோதனை சான்றிதழ் தேவைப்பட்டது. குறிப்பாக வெளிநாடு செல்பவர்களுக்கு கண்டிப்பாக அந்தச்சான்றிதழ் தேவைப்பட்டது. இதற்காக நாகர்கோவிலில் அரசு அனுமதி பெற்ற பிரபல தனியார் ஆய்வகம் ஒன்று நடைபெற்று வந்தது.
அதே வேளையில் குழித்துறை பகுதியில் தனியார் ஆய்வகம் நடத்தப்பட்டு வந்த உரிமையாளர் ஜெயக்குமார், மருத்துவர்களான கிங் டிஜிட்டல், எட்வின் கிங்ஸ்ராஜ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பணம் கொடுத்தால் நெகட்டிவ் சான்றிதழ் உடனடியாக வழங்கிவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
அதுவும் நாகர்கோவிலில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்தினுடைய சான்றிதழை திருட்டுத்தனமாக எடுத்து, அதில் நெகட்டிவ் என போலியாக பதிவு செய்து வழங்கி வந்துள்ளனர். இந்த முறைகேடு அப்போது சுகாதாரத்துறை அலுவலர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போலி நெகட்டிவ் சான்றிதழைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குச்சென்றவர்கள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தாருக்கு இது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதை உறுதிப்படுத்திய பின்பு டாக்டர் ஸ்ரீனிவாசன் கண்ணன் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி புகார் கொடுத்தார். ’கரோனா நோய்த்தொற்றியிருப்பவர்களுக்கும் நோய் இல்லை என சான்றிதழ் வழங்கினால் சமூகத்தில் நோய்த்தொற்று பரவலுக்கு அதுவே ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தது’ என்பதையும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய டாக்டர் ஸ்ரீனிவாசன் கண்ணன் 'தொற்று இருப்பவர்களுக்கும் தொற்று இல்லை என போலிச்சான்றிதழ் கொடுத்ததால் அது சமூகத்தில் கரோனா பரவலை அதிகரித்தது மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்குச்செல்பவர்கள் முக்கியமாக இந்த சான்றிதழைப் பயன்படுத்தியதால் உலக அளவில் இது பரவல் அதிகரிப்புக்கு காரணமாகவும் இருந்திருக்கும்.
சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தி வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்’ என குற்றம்சாட்டினார். இதன்மூலம் மூன்று லட்சம் பேருக்கு மேல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும்; இதன்மூலம் ரூபாய் 32 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்கள் நிறுவன பெயரைப்பயன்படுத்தி போலி கரோனா நெகட்டிவ் சான்று; பாதிக்கப்பட்ட மருத்துவரின் புகாரின்பேரில் எப்.ஐ.ஆர் பதிவு! இதையும் படிங்க:திமுக, பாஜக கூட்டணி வராது - அண்ணாமலை