கன்னியாகுமரி மாவட்டம் தடிக்கார கோணத்திலிருந்து கீரிப்பாறை வரை செல்லும் மலை கிராம சாலை நீண்ட காலமாக பழுதடைந்து போக்குவரத்துக்கு உபயோகமற்ற நிலையில் உள்ளது. இந்த வழியாக கரும்பாறை கீரிப்பாறை, மாறாமலை உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள எஸ்டேட்டுகளில் பணிபுரிந்துவருபவர்கள் மற்றும் குடியிருந்து வருபவர்கள் இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.
இந்தப் பாதையைச் சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறை தயாராக இருந்தும் வனத் துறையினர் அதற்கு உரிய அனுமதி அளிக்காததால் இந்தப் பணிகள் காலம் கடந்துசெல்கிறது. எனவே இந்தப் பாதையைச் செப்பனிட வனத் துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் தலைமையில் தடிக்காரன் கோணம் கீரிப்பாறை சாலையில் இன்று 200-க்கும் மேற்பட்ட மலை கிராம தோட்டத் தொழிலாளர்கள், திமுகவினர், பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் செய்தனர்.