கன்னியாகுமரி:பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி கொடை விழா 10 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா மார்ச் மாதம் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கோயில் விழாவின்போது 10 நாட்களும் கோயிலில் இந்து அமைப்புகள் சார்பில் சமய மாநாடு கிட்டத்தட்ட 86 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சமய மாநாடு இந்து அமைப்புகள் நடத்தத் தடை விதித்துள்ளது. சமய மாநாடுகளை அறநிலையத்துறை நேரடியாக நடத்தும் என அறிவித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் நாகர்கோவில் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சமய மாநாடு நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு போட்டி மனுவாக திமுக தலைமையிலான கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தனர்.