கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாவட்டத்தில் தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகிறது.
இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஊழியர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
எனவே நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை மீண்டும் இயக்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்துவருகிறது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகளை போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளரை ஏற்றிச் செல்வதற்காக ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 10 பேருந்துகள் இயக்கிவருகிறது. அரசு ஊழியர்களையும் ஏற்றிச் செல்லும் வகையில் நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.