தமிழ்நாட்டின் உணவுப் பழக்கத்தில் மரவள்ளிக்கிழங்கிற்கு எப்போதும் ஓரிடமுண்டு. அவியல், அடை, மசியல், சிப்ஸ் என மரவள்ளிக்கிழங்கில் பல உணவு வகைகள் இங்குள்ளன. வள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு, கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு என்று பல்வேறு பெயர்களில் இது அழைக்கப்பட்டும், உண்ணப்பட்டும் வருகிறது. மரவள்ளிக்கிழங்கிலிருந்து பாயாசத்திற்கு பயன்படுத்தப்படும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் எனப்படும் கிழங்கு மாவு உட்பட பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கிழங்கை பெரும்பாலும் கேரள மாநில வியாபாரிகள் மொத்தமாக ஏலம் எடுத்து வாங்கிச் சென்று விடுவார்கள். அதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கிழங்கை ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்நிலையில் இங்கு பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கில் வெள்ளை சுருட்டுப்புழு பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இதனால் கிழங்கு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புழுக்கள் பாதிப்பு அதிகம் இருப்பதால் கேரள வியாபாரிகள் கிழங்கை வாங்குவதற்கும் தயங்குகின்றனர். இதனால் கிழங்கை வீட்டிலுள்ள கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், கிழங்கு விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.