கன்னியாகுமரி: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளச்சல் உட்கோட்ட முகாம் அலுவலகம், தக்கலை மதுவிலக்கு காவல் நிலையம், கொற்றிகோடு காவல் நிலையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். பின்னர் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்ற போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு விழாவில் கலந்து கொண்டார்.
இதில் தோல்பாவை கூத்து, மாணவ - மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மொபைல் போன், ஆபரணங்கள், திருட்டு மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், "ஜூன் 26ஆம் தேதி, சர்வதேச போதை ஒழிப்பு நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி போன்ற பகுதிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பதைத் தடுக்க மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரே சுமார் 70 லட்சம் மாணவர்கள் சென்றடையும் விதத்தில் விழிப்புணர்வு செய்தார்கள். பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் இந்த விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
என்சிசி (NCC) மற்றும் என்எஸ்எஸ் (NSS) போன்ற மாணவர்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படுகிறது. போதைப் பொருட்கள் டிமாண்டை குறைக்க விழிப்புணர்வு தான் செய்ய வேண்டும். மேலும் சப்ளையை குறைக்க காவல்துறை முயற்சி எடுத்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருள் விநியோகத்தைக் குறைக்க 28 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டு 27,474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 54 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் வியாபாரிகளின் 80 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு, போதைப் பொருள் கடத்தப் பயன்படுத்தும் 2,761 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.