தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைத் தடுக்கும்விதமாக சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி கன்னியாகுமரி காவல் துறை சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார். மேலும் பல இடங்களில் திடீர் அதிரடி ஆய்வுகளைச் செய்துவருகிறார்.
இந்நிலையில் அஞ்சுகிராமம் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சென்ற அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் அனைவரையும் தடுத்து சோதனையிட்டார்.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உரிய ஆவணம் இன்றியும், தலைக்கவசம் இல்லாமலும் வந்ததைக் கண்டறிந்த அவர், பின் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல்செய்து கல்லூரி வாசல் முன்பு வரிசையாக நிறுத்திவைக்க செய்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களை எச்சரித்த காவல் துணை கண்காணிப்பாளர் உரிய ஆவணம் இன்றி வாகனம் ஓட்டினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கியதுடன், தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தினார்.