'பெண்களின் சபரிமலை' என வர்ணிக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி செய்யாததால் கோயில் வளாகம் அசுத்தம் அடைந்துள்ளது. மேலும், இங்கு அர்ச்சனைக்குக் கொண்டு வரப்படும் பொருட்களை கோயில் ஊழியர்கள் மீண்டும் கடைகளில் விற்று, அவற்றை மீண்டும் மீண்டும் பக்தர்கள் கோயிலுக்கு கொண்டு வருவதாகவும் பக்தர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதேபோல் இங்கு கோயிலுக்குள் கொண்டுவரப்படும் பன்னீரை கோயில் ஊழியர்கள் கடைகளில் விற்று, அங்கிருந்து மீண்டும் மீண்டும் பக்தர்கள் பன்னீர் வாங்கி கோயிலுக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்துக் கோயில் கூட்டமைப்பினர் பலமுறை கோயில் பிரச்னைகள் தொடர்பாக அறநிலையத் துறைக்கு மனு கொடுத்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் நேற்று(ஜன.03) அர்ச்சனை தட்டில் மனுக்களை வைத்து கோயிலில் அளிக்கச் சென்றனர்.