தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாழடையும் சுனாமி குடியிறுப்புகள்; அடிப்படை வசதியின்றி மீனவர்கள் தவிப்பு!

கன்னியாகுமரி: பாதை, மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதியில்லாமல் 50க்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்பு வீடுகள் பாழடைந்து கிடப்பதால், குடியேற முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

tsunami-settlements

By

Published : Oct 10, 2019, 10:52 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது வீடுகளை இழந்து தவித்த மீனவர்களுக்கு கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனையின் பின்புறம், குண்டல், மணக்குடி, பள்ளம், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு அவை மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த குடியிருப்புகளில் பெரும்பாலானவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பலர் வீடுகளை விட்டு வேறு இடங்களில் குடிபெயர்ந்து விட்டனர்.

கன்னியாகுமரி அருகே குண்டலில் கட்டப்பட்டுள்ள சுனாமி வீடுகளுக்கு செல்ல சரியான பாதை, மின் இணைப்பு மற்றும் குடிநீர் என அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் அங்கு ஒருவர் கூட வசிக்கவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் புதர் படர்ந்து காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி விஷப்பாம்புகளும், விஷப்பூச்சிகளும் நுழைவதால் ஆபத்தை அறிந்து அங்கு மீனவர்கள் குடியேற மறுக்கின்றனர்.

பாழடைந்து சிதலமடையும் சுனாமி குடியிருப்புகள்

வீடுகளுக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து நாட்கள் பல கடந்தும் மின் இணைப்புகள் வழங்கப்படாததால் யாரும் தங்காமல் வீடுகள் சேதமடைந்தும் பாழடைந்தும் காணப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் இருட்டை பயன்படுத்தி திருடர்கள் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனை சரிசெய்து தரக்கோரி பலமுறை போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்றும், போராட்டத்தின்போது அரசு அலுவலர்கள் வந்து சீரமைத்து தருவதாகக் கூறிவிட்டு செல்கிறார்களே தவிர மாற்றம் எதுவும் நடக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். குடியிருப்பு வாசிகளின் அடிப்படை தேவையை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் குடியிருப்புகளை சீரமைத்து தாங்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதியினர் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details