ஈரானில் குமரி மாவட்ட மீனவர்களை தவிக்கவிட்டு புறப்பட்ட கப்பல் - கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி: ஈரான் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதிய மீன்பிடி தளம் இல்லாததால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வளைகுடா நாடுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா பீதி ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். ஈரான் நாட்டில் தொழில் செய்து வந்த சுமார் 750 இந்திய மீனவர்கள் அங்குள்ள பல தீவுகளில் உயிருக்காக தஞ்சம் புகுந்தனர். அவர்களை சொந்த ஊர் அழைத்து வர வேண்டி கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மீனவர்கள் 682 பேர் உட்பட சுமார் 700 பேருடன் கப்பல் ஓன்று ஈரான் நாட்டில் பந்தர் அப்பார் துறைமுகத்தில் இருந்து நேற்று ( ஜூன் 25) இரவு புறப்பட்டது.
அதற்கு முன்னதாக இந்திய தூதரகம் மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் இப்போது புறப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்கள் புறப்படவில்லை. அங்கேயே தங்கி இருந்து கரோனா தொற்று குறைந்ததும் தொழில் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் சிலர் தாயகம் திரும்புவதை அடுத்து விசாவை கேன்சல் செய்தனர்.
மணக்குடி, முட்டம், கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 45 பேர் உட்பட 64 மீனவர்களை கப்பலில் ஏற்றவில்லை.
இதனால் அவர்கள் கையில் விசா இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களின் உணவுக்கு கூட போதிய காசு இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களின் நிலைமையை பார்த்து இங்கு இருக்கும் மீனவ குடும்பங்கள் கண்ணீர் வடிக்கின்றன.
அரசு உடனடியாக ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கி தவிக்கும் மீனவர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.