பார் கவுன்சிலின் வழக்கறிஞர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்
கன்னியாகுமரி: தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சிலின் வழக்கறிஞர் விரோதப் போக்கை கண்டித்து நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு சார்பில், தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சிலின் வழக்கறிஞர் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 22) நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் மரிய ஸ்டீபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், வழக்கறிஞர்களின் உரிமையும் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
வழக்கறிஞர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமலேயே எவ்வித விசாரணையுமின்றி இயற்கை நியதிக்கும் முரணான 16 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற பழிவாங்கும் நீதிக்கு எதிரான செயல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனர்.