கன்னியாகுமரி:கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த கல்வி ஆண்டில் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாலிடெக்னிக், பொறியியல், ஐடிஐ உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் இந்தாண்டு பெரும்பாலான இடங்கள் காலியாகவுள்ளன. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு சேர்க்கை விகிதம் குறைவாகவே உள்ளது.
இது தொடர்பாக, விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராம்குமார் பேசியபோது, "10 ஆண்டுகளாக இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளை விட இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக மாணவர்கள் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப படிப்பை பொருத்தளவில் கடந்தாண்டுகளில் இயந்திரவியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இந்தாண்டு இயந்திரவியல் படிப்பில் போதுமான மாணவர்கள் சேரவில்லை. பதிலாக, இசிஇ படிப்பில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தொழில்நுடப் படிப்புகளை பொறுத்த அளவில் அனைத்துப் படிப்பிற்கும் வேலை வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாணவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இது தொடர்பாக மாணவர்களிடம் அரசுவிழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
தொழில்நுட்பக் கல்வியைப் பொறுத்தவரை முதலாம் ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் 21 முதல் நடைபெற்றுவருகிறது. தற்சமயம், செயல்முறை வகுப்புகள் நடத்துவதில் சிரமம் இருந்துவருகிறது" என்றார்.