கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜேஷ் மற்றும் சபீக் ஆகியோர் டீ கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் டீ கடை இரவு முழுவதும் செயல்படும்.
இன்று (ஜூலை 17) அதிகாலையில், கடையில் டீ வியாபாரம் நடந்து கொண்டு இருந்தபோது, கடையில் உள்ள சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து, சுதாகரித்து கொண்ட டீ மாஸ்டர் உட்பட கடையில் இருந்தவர்கள் உடனடியாக கடையில் இருந்து வெளியேறினர். பின்னர் பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதில், டீ குடிக்க வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
மேலும், சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்க வந்தவர் ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கும், நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்து. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் டீக்கடையில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், தீக்காயமடைந்த 8 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் 20 நிமிடங்களுக்கு மேலாக சிலிண்டரில் தீ பற்றி எரிந்துள்ளது. அதனை அணைக்காமல் டீக்கடை இயங்கி வந்த நிலையில், அதிக வெப்பம் காரணமாக சிலண்டர் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பாதாள சாக்கடை பணியில் திடீர் மண்சரிவு - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு