தமிழகத்தில் தற்போது ஃபானி புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து கன்னியாகுமரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபானி புயல் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை! - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: தமிழகத்தில் ஃபானி புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை, இதனால் ஏராளமான படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக அனைத்து மீனவர் சங்கங்கள் மற்றும் தேவாலய நிர்வாகங்களுக்கும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பிவைத்தன. கன்னியாகுமரியில் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுவதால் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் தானாகவே கரை திரும்பி வருகின்றனர். இந்த எச்சரிக்கையால் கன்னியாகுமரி மீனவர்கள் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களில் உள்ள கட்டுமர படகுகள் மற்றும் பைபர் படகுகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் தரையில் பத்திரமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி விசைப் படகுகளுக்கு, மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உயரத்திற்கு அலை எழும்பியதால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர பாதுகாப்புப்படை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.