கன்னியாகுமரி:நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்புகொண்டு, காதலிப்பதுபோல் நடித்து அவர்களோடு தனியறையில் இருந்ததை வீடியோக்களாக எடுத்து மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகார்கள் எழுந்தன.
அந்த புகார்களைத் தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காசி மீது கந்துவட்டி தொடர்பாக இளைஞர் ஒருவர் அளித்தப் புகார், காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்தப் புகார்கள் என மொத்தம் ஏழு புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காசி வழக்கு தற்போது சிபிசிஐடி காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கந்துவட்டி தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஆறு வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது. அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகளில் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.