கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிபு(30). மீன்பிடி தொழில் செய்யும் இவர், ஐ.ஏ.எஸ் அலுவலர் சகாயத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், ஷிபுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சீமா என்பவருக்கும் குறும்பனை இன்னாசியார் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண மேடையில் முதியவர்களுக்கு மரியாதை செய்த மணமக்கள்! - முதியவர்களுக்கு மரியாதை செய்த புதுமணத் தம்பதி
கன்னியாகுமரி: குளச்சல் அருகே தங்களின் திருமணத்தின் போது புதுமணத் தம்பதியினர், முதியோர்களை மண மேடையில் அமர வைத்து, பரிவட்டம் கட்டி, அவர்களின் பாதங்களை கழுவி கவுரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சின்போது மணமக்கள் இருவரும் புதுமையாக சிலவற்றை அறிமுகப்படுத்தினர். அதன்படி அந்த கிராமத்தில் உள்ள முதியவர்களை கவுரவிக்க முடிவு செய்த தம்பதியினர், தங்களின் திருமணத்தின்போது வயது முதிர்ந்த மூன்று மீனவர்களை மேடைக்கு வரவழைத்து அவர்களுக்கு புத்தாடை அணிவித்து, தலையில் பரிவட்டம் கட்டி அவர்களது பாதத்தை தண்ணீரால் கழுவியதோடு வணங்கி ஆசி பெற்றனர்.
தங்களை கவுரவித்த புதுமண தம்பதியினரை அந்த மூன்று முதியவர்களும் மனதார வாழ்த்தினர். மேலும் அதைத் தொடர்ந்து புதுமண தம்பதியினர் அப்பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டு இனிதே தங்களது இல்லற வாழ்வை தொடங்கினர். பல வருடங்கள் பாதுகாப்பாக வளத்து ஆளாக்கும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் கொண்டு விடும் இந்த காலத்தில், புதுவாழ்வை துவங்கும் வேளையில் மூத்தோரின் ஆசி தேவை என்பதை உணர்ந்து முதியவர்களை வணங்கி கவுரவித்த இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்தது.