கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் அத்தியாவசியக் கடைகளை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் கடைகள், தனியாருக்குச் சொந்தமான மதுபானக் கூடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூக விரோதிகளால் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. ஊரடங்கு பாதுகாப்பு, சோதனைப் பணிகளில் ஈடுபட்டுவரும் காவல் துறையினருக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில், கள்ளச் சாராயம் விற்பனையாளர்கள் பெறும் சவாலாக உள்ளனர்.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் மலை பகுதிகளான கீரிப்பாறை, வெள்ளாம்பி, காளிகேசம், பொய்கை அணை, ஆரல்வாய்மொழி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோதிகளால் கள்ளச் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்துவதாக அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.