சீன நாட்டில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் 10க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கேரள எல்லைப் பகுதியான குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். கேரள மாநிலத்திலிருந்து வரும் பயணிகள் மாவட்ட எல்லையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு, அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவை குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கலந்தாய்வுக் கூட்டத்தை இன்று மாலை நடத்தினார். இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மயில் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
ஆலோசனை மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் இந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது எப்படி, மருத்துவ அலுவலர்கள் எப்படிச் செயல்படவேண்டும், நோய்த்தாக்கம் ஒருவருக்குத் தெரிந்தால் அவரையும் அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கும் எவ்வாறு மருத்துவம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க:கொரோனா முன்னெச்சரிக்கை: பொதுமக்களுக்கு கடலூர் ஆட்சியர் துண்டுப்பிரசுரம்