கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து போடும் பணி இன்று தொடங்கியது. இதற்காக இரண்டு கட்டங்களாக ஒத்திகை நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமையிட மருத்துவமனை, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் காரோனா தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல்கட்டமாக 22 ஆயிரத்து 600 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த மருந்துகள் அனைத்தும் கிருஷ்ணன் கோயிலில் உள்ள தடுப்பூசி மருந்து குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் நான்கு கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முதல்கட்ட தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் ஒரு நாளைக்கு 400 பேருக்கு போடப்படுகிறது. இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் 4 இடங்களில் காரோனா தடுப்பூசி முகாம் தடுப்பூசி திட்ட பணிக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்களை கோவின் என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசிகளை எங்கே எந்த இடத்தில் பெறவேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைபேசி செயலி மூலமாக குறுந்தகவல் சென்றடையும். மேலும் அவர்கள் தடுப்பூசி பெற்ற பின்னர் தடுப்பூசி பெற்ற விவரங்களை கோவினில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!