இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மகராஷ்டிராவில் பாதிப்பு 38ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் முதன் முறையாக 33 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
நாளுக்கு நாள் மக்களை அச்சமடையவைக்கும் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. அங்கு இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்படைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், குமரி மாவட்ட மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். கேரளாவைப்போல் குமரி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு இருப்பதையறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
வெளிநாட்டிலிருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் வந்த 28 வயது இளைஞருக்கும், வெளிநாட்டிலிருந்து கொச்சி வழியாக கன்னியாகுமரி வந்த மேலும் ஒரு இளைஞருக்கும் கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்தது.